சங்கராபுரம் அருகே, புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் அகற்றம் - பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சங்கராபுரம் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராம எல்லையில் அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமித்து விநாயகர் கோவில் மற்றும் ஒரு கூரை வீடு கட்டியிருந்தனர். அவற்றை அகற்றக்கோரி எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் கடந்த 27.12.2018-ந்தேதி ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற உத்தரவிட்டதன் பேரில் நேற்று சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ரத்தினசபாபதி ஆகியோர் முன்னிலையில் விநாயகர் கோவில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஆனால் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில பெண்கள் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொள்ள முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நிமிலன் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் 19 பெண்கள் உள்பட 32 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com