ஸ்ரீபெரும்புதூர் அருகே நூதன முறையில் 15 பவுன் நகை கொள்ளை 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீபெரும்புதூர் அருகே நகை கடையில் நூதன முறையில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாராம் (வயது 30). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தங்க நகை விற்பனை மற்றும் அடமானம் வைப்பது உள்ளிட்டவை நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மர்ம நபர் ஒருவர் முன்னாராமின் கடைக்கு வந்து 15 பவுன் நகையை தேர்வு செய்து தனது மனைவிக்கு அந்த நகையை செல்போனில் படம் பிடித்து காட்டிக்கொண்டு இருந்தார்.

அப்போது மற்றொரு நபர் திடீரென கடைக்கு வந்து முன்னாராமிடம் சம்பந்தமே இல்லாமல் தகராறு செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகையை பார்த்துக்கொண்டு இருந்த அந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் 15 பவுன் தங்க நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். நகையுடன் தப்பிச்சென்ற மர்ம நபரை பிடிக்க முயற்சிக்கும்போது தகராறு செய்த நபரும் அங்கிருந்து நைசாக தப்பிச்சென்று விட்டார்.

மர்ம நபர்கள் இருவரும் திட்டம் போட்டு நூதன முறையில் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து முன்னாராம் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com