தளி அருகே, அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தளியை அடுத்த குறிச்சிக்கோட்டையில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தளி அருகே, அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

தளி,

தளி அருகே குறிச்சிக்கோட்டை உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடுமலை - மூணாறு பிரதான சாலையை ஒட்டியபடி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக டாஸ்மாக்கடை ஒன்று தொடங்கப்பட்டது. அங்கு மதுபாட்டில்களை வாங்குவதற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நாள்தோறும் மதுப்பிரியர்கள் வந்து செல்கின்றனர். இந்த கடையை மையமாகக் கொண்டு தனியார் ஒருவர் அங்கு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

குறிச்சிக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை ஒன்று தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வரும் மதுப் பிரியர்கள் மதுவை வாங்கி சாலையின் ஓரங்களில் அமர்ந்து குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதை கவனித்த தனியார் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு அருகில் பார் ஒன்றை தொடங்கினார். அதற்கு அவர் முறையாக அனுமதியும் பெறவில்லை.

மேலும் சில்லரை மது விற்பனைக்கும் அந்த பார் தான் மூலகாரணமாக உள்ளது. இதனால் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அது மட்டுமின்றி போதை ஆசாமிகள் குடித்துவிட்டு சாலையின் குறுக்காக செல்வது, வாகனங்களை வேகமாக ஓட்டிச்செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடுமலை - மூணாறு சாலையில் செல்கின்ற மற்ற வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அனுமதியின்றி செயல்படும் பாரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது.

எனவே குறிச்சிக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பாரை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரிகள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com