தேன்கனிக்கோட்டை,
இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஏ.கொத்தப்பள்ளி, பின்னமங்கலம், சாத்தனூர், உச்சனப்பள்ளி, ஜிகூர், அடிவிசம்பரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால் விவசாயம் பொய்த்து விட்டது. மேலும் குடிநீர் இன்றி கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தால் மழை பெய்யும் என்று நம்பிய கிராம மக்கள் நேற்று காலை 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். முன்னதாக கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள கோவில் அருகில் திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு சடங்கு சம்பிரதாயங்களுடன் பழங்கள், மாலைகள், பூஜை பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆண் கழுதைக்கு பட்டு வேட்டியும், பெண் கழுதைக்கு பட்டு சேலையும் அணிந்து அலங்காரம் செய்தனர். இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத பெண் கழுதைக்கு தாலி கட்டப்பட்டது. இந்த திருமணத்தில் ஏ.கொத்தப்பள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அட்சதை தூவி கழுதைகளை வாழ்த்தினார்கள்.
ரூ.1 லட்சம் செலவில் நடந்த இந்த திருமண விழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் அங்கு மொய் விருந்தும் நடைபெற்றது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். அப்போது மழை பெய்தது. எங்கள் முன்னோர்களும் நீண்ட காலமாக மழைக்காக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இந்த பாரம்பரிய முறையை நாங்களும் கடைபிடித்து தற்போது கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் கிராமங்களில் மழை பெய்து குடிநீர் பிரச்சினை நீங்கும். விவசாயம் செழிக்கும் என நம்புகிறோம். என்றனர்.