

ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து காமராஜநல்லூர் பகுதி மக்கள், தங்களது மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ள பெருங்குளம் மறுகால் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பாலம் அமைக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவரது உடலை வாய்க்கால் தண்ணீரின் வழியாக சுமந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்கின்றனர். மழைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் காமராஜநல்லூரைச் சேர்ந்த சித்திரைவேல் மனைவி சொர்ணம் (வயது 70) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். நேற்று மதியம் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, இறுதி யாத்திரை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
ஏரல் மரப்பாலம் பகுதியில் சென்றபோது, பொதுமக்கள் தங்களது மயானத்துக்கு செல்வதற்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, சொர்ணத்தின் உடல் இருந்த இறுதி யாத்திரை வாகனத்துடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெருங்குளம் மறுகால் வாய்க்காலின் தெற்கு பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதா?, மயானத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
பின்னர் சொர்ணத்தின் உடலுடன் கூடிய சவப்பெட்டியை பொதுமக்கள் தோளில் சுமந்தவாறு, வாய்க்கால் தண்ணீரை கடந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.