ரெயில் தண்டவாளம் அருகே காய்ந்த புற்களில் தீப்பிடித்தது புகை மூட்டத்தால் பயணிகள் அவதி
கோவை,
கோவை புரூக் பாண்ட் சாலை அருகே ரெயில் தண்டவாளம் செல்கிறது. இதன் அருகே ஏராளமான காய்ந்த புற்கள் உள்ளன. நேற்று காலை திடீரென்று அந்த புற்களில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி எரிந்தது.
இதனால் அங்கு புகை மூட்டம் பரவியது. அப்போது அந்த வழியாக சென்ற ரெயில்களில் இருந்த பயணிகள் புகை மூட்டத்தால் அவதி பட்டனர்.அவர்கள் இது குறித்து கோவை தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து அங்கு பிடித்த தீயை முழுவதுமாக அணைத்தனர். தீப்பிடித்த பகுதி அருகே மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் அங்கு அமர்ந்து மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எனவே அவர்கள்தான் அங்கு காய்ந்த புற்களில் தீ வைத்தார்களா? அல்லது கடும் வெயில் காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாநகர பகுதி வழியாக தண்டவாளம் செல்கிறது. இதை ஒட்டிய பகுதியில் காய்ந்த புற்கள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தண்டவாளத்தின் ஓரங்களில் உள்ள புற்களை முழுமையாக அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

