கடையம்,
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்தில் கடனாநதி அணைப்பகுதியின் அடிவாரத்தில் கடந்த பல தினங்களாக மக்களை அச்சுறுத்தியும், விளை நிலங்களில் உள்ள பழங்களையும், பயிர்களையும் கரடி சேதப்படுத்தி வந்தது.
எனவே கரடியை பிடிக்கக்கோரி விவசாயிகளும், அப்பகுதி பொது மக்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி ஆங்காங்கே தோட்டங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
கரடி சிக்கியது
மேலும் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கூண்டு வைத்து இரவு முழுவதும் ரோந்துப்பணி யில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பங்களா குடியிருப்பில் திரவியம் என்பவருடைய தோட்டத்தில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று முன்தினம் இரவு கரடி சிக்கியது. இது கடையம் பகுதியில் பிடிபட்ட 5-வது கரடி ஆகும். பிடிபட்ட கரடியை வனத்துறையினர் பிடித்துச் சென்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.