விருத்தாசலம் அருகே, பழங்கால சாமி சிலை, பொருட்கள் கண்டெடுப்பு - விவசாய பணிக்கு நிலத்தை தோண்டிய போது கிடைத்தது

விருத்தாசலம் அருகே விவசாய பணிக்கு நிலத்தை தோண்டிய போது பழங்கால சாமி சிலை மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பழைய பட்டினம் கிராமத்தில் முதுமக்கள் பயன்படுத்திய தாழி போன்ற பொருட்கள் கிடைத்து வருகின்றன. எனவே அங்கு தொல்லியல் துறையினர் முகாமிட்டு அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல்(வயது 75) என்கிற விவசாயி வாய்க்கால் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் தோண்டிய போது, ஒரு சாமி சிலை மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் இருந்தன. அதாவது, சாமி சிலை மற்றும் நான்கு முக்காளி, 4 பூஜை மணி, 2 சொம்பு, ஒரு பானை, 2 தாம்பூலத்தட்டு, 2 தீர்த்தக்குடம், 3 சூலம், 2 தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இந்த தகவல் அப்பகுதி யில் காட்டுத்தீ போல பரவியது. அதை தொடர்ந்து சுற்றிலும் உள்ள கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து பார்வையிட்டு சென்றனர். அப்போது அங்கு கிடைத்த சிலை மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்ததால் அது எந்த சாமி என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதுபற்றி அப்துல் ஜலீல் விருத்தாசலம் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய்வாளர் சுமத்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சாமி சிலையை பார்வையிட்ட தாசில்தார் கவியரசு, இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களாக இருக்கலாம். இருப்பினும் இவை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து, இது எந்த காலத்தை சேர்ந்தது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

அப்போது, அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், சாமி சிலை மற்றும் பொருட்களை தங்களிடமே ஒப்படைக்கும் படியும், அதை நாங்கள் கோவிலில் வைத்து வழிபடுவோம் என்றும் தெரிவித்தனர். அதற்கு வருவாய்த்துறையினர் தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே, இதுபற்றி முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்து, அவற்றை எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com