மரக்காணம் அருகே கழுவேலி ஏரியில் ரூ.161 கோடியில் புதிய தடுப்பணை கட்ட திட்டம் - அதிகாரிகள் ஆய்வு

மரக்காணம் அருகே கழுவேலி ஏரியில் ரூ.161 கோடியில் புதிய தடுப்பணை கட்டுவது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Published on

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கழுவேலி ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ளது. இது எடையன் திட்டு பகுதியில் கடலுடன் சங்கமிப்பதால், மழைகாலங்களில் ஏரியில் நன்னீரும், கோடைகாலங்களில் உவர்நீரும் மிகுந்து காணப்படுகிறது.

இதனால் கோடை காலங்களில் கடல்நீர் ஏரியில் கலப்பதை தடுக்கும் பொருட்டு கீழ்மட்ட கலிங்குகளுடன் கூடிய 77 நீர் போக்கிகள் உள்ளன. ஆனால் இந்த நீர் போக்கிகள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் கடல் நீர் ஊடுருவல் அதிகமாக உள்ளது. எனவே இந்த ஏரியின் மூலம் பாசனம் பெறும் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடல் நீர் ஊடுருவலை தடுத்து மழைகாலங்களில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக புதிய தடுப்பணை கட்ட திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பழுதடைந்த நீர்ப்போக்கிகளுக்கு மாற்றாக 200 மீட்டர் அகலத்தில் புதிய தடுப்பணையும் அதன் இரு புறங்களிலும் 6 ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவரும் கட்ட திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தால் அருகில் உள்ள ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு, ஆலப்பாக்கம், கந்தாடு,புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனபாக்கம், நாணக்கல் மேடு, தேவனந்தல், காரட்டை போன்ற கிராமங்கள் பயனடைய உள்ளன. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக பொதுபணித்துறையில் இருந்து நீர்வள ஆதாரத்துறையை சேர்ந்த சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் ஆகியோர் நேற்று நேரில் சென்று கழுவேலி ஏரியை பார்வையிட்டனர். அப்போது விழுப்புரம் செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற் பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com