திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.78 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. இதன் கரை அருகே கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவானது சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல் விதிகளை (சூத்திரங்கள்) நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் 55 எண்ணிக்கையிலான மாதிரிகள் வைக்கப்பட உள்ளது.

மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்கள், பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான பரிணாம பொம்மைகள் மற்றும் பலகைகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, சிற்றுண்டி நிலையம், இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.

மேலும் வேங்கிக்கால் ஏரிக்கரையோரம் பச்சை புல்வெளி, குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் இந்த பூங்காவில் அமைக்கப்பட உள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் ஏரிக்கரையோரம் பச்சை புல்வெளி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பூங்கா அமைக்கும் பணி குறித்தும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கூறினார். தொடர்ந்து அவர் பூங்காவில் அமைக்கப்பட உள்ள பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com