தியாகதுருகம் அருகே, தச்சு தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தியாகதுருகம் அருகே தச்சு தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அருகே, தச்சு தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் சின்னசேலம் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தையும், வீட்டில் இருந்த குத்து விளக்குகளையும் காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கவேல் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும், குத்து விளக்குகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com