வேடசந்தூர் அருகே சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் தாய்-மகன் படுகாயம்

வேடசந்தூர் அருகே சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்ததில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.
Published on

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சுப்புத்தாய் (வயது 45). இவரது மகன்

வீரமுத்து (17). முருகேசன் இறந்து விட்டார். இதனால் தாயும், மகனும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு வீட்டில் சுப்புத்தாய் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. உடனே வீட்டிற்கு வெளியே இருந்த வீரமுத்து உள்ளே சென்று சிலிண்டரை மூட முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென்று கியாஸ் சிலிண்டரின் டியூபில் தீப்பிடித்தது.

சற்று நேரத்தில் கியாஸ் சிலிண்டரில் பிடித்த தீ வீடு முழுவதும் மளமளவென பரவியது. இதில் சுப்புத்தாய், வீரமுத்து ஆகியோரின் உடலில் தீப்பற்றியது. அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். படுகாயமடைந்த தாய்-மகனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com