வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் தனது சொந்த ஊரிலேயே டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். டபுளிங் நூற்பாலை என்பது இரண்டு நூலை ஒரே நூலாக இணைப்பதாகும். இந்த நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் நூற்பாலைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும்போது வெளியில் வைக்கப்பட்டு இருந்த நூல்கோன்களில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென்று அனைத்து கோன்களுக்கும் வேகமாக பரவியது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கோன்கள் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கு காரணம் தெரியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.