விக்கிரமசிங்கபுரம் அருகே, 2 மாதங்களாக சாலையில் கொட்டி கிடக்கும் ஜல்லிக்கற்கள் - பொதுமக்கள் கடும் அவதி

விக்கிரமசிங்கபுரம் அருகே சாலை சீரமைப்பு பணிக்கு சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் கடந்த 2 மாதங்களாக அப்படியே விடப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
Published on

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் தாமிரபரணி தெரு, நக்கீரர் தெரு, இளங்கோவடிகள் தெரு, மாணிக்கவாசகர் தெரு, தேசிய விநாயகர் தெரு, பாலாறு தெரு ஆகிய தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனை சீரமைப்பதற்காக யூனியனில் இருந்து ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. பின்னர் அதற்கான பணிகளும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் சாலைகள் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் சாலைகளில் கொட்டப்பட்டது.

இதனால் புதிய சாலை வரப்போகிறது என அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பால் சில நாட்களில் சாலை பணிகள் முடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு பணிகள் மீண்டும் தொடரும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்த பிறகும், சாலை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலைகளில் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டு, பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிப்பார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேபோன்று சிவந்திபுரம் பஞ்சாயத்து வராகபுரம்-ஆறுமுகம்பட்டி இணைப்பு சாலை, ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வாறுகால் தோண்டப்பட்டு அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் சிறுவர்கள் பலர் விளையாடும்போது, தவறி விழுவதும், எழுந்து செல்வதுமாக உள்ளது. எனவே இப்பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com