சென்னை,
தமிழக அரசின் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்யமிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2019-ம் ஆண்டு ஜூலையில் சட்டசபையில் நடந்த மானியக்கோரிக்கையின்போது வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்:-
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக, பத்திரப்பதிவிற்கு முன்பே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
இந்த நடைமுறையின்கீழ், அவரவரின் நிலங்கள், சொத்துகளை விற்பனை செய்ய விரும்பும் நிலஉரிமையாளர்கள் வட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து, விற்பனை செய்ய விரும்பும் நிலங்கள், சொத்துகளின் புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற வேண்டும்.
புலத்தணிக்கை
அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், வட்ட அலுவலகங்களிலுள்ள நிலஅளவை பணியாளர்கள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள். அந்த நிலப் பரிவர்த்தனைக்காக தற்காலிக உட்பிரிவு ஆவணங்களைத்தயார் செய்து பட்டா மாறுதல் செய்யத்தக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையவழியில் தொடர்புடைய சார்பதிவகம் மற்றும் நிலஉரிமையாளர் (விண்ணப்பதாரர்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் பின்னர் நிலஉரிமையாளர் தனது நிலப்பரிவர்த்தனையை சார்பதிவகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். இணையவழியிலான பட்டாமாறுதல் விவரங்கள், மீண்டும் புலத்தணிக்கை ஏதுமின்றி தொடர்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்திருந்தார்.
கட்டணம்
இந்தநிலையில் இதுகுறித்து அரசுக்கு சர்வே மற்றும் செட்டில்மெண்ட் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். அதில், ஊரகப்பகுதியில் நிலபரிவர்த்தனைக்காக பதிவுக்கு முன்பு நிலஉரிமையாளர்கள் ஆன்லைன்பட்டா பெறாதநிலையில், பிரிமியூட்டேசன்ஸ்கெச் என்ற புலப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகலைப்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான சாத்தியக்கூறுகளை இணையதளத்தில் உருவாக்கித் தரவேண்டும். அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்துக்கு ஆயிரம் ரூபாய் என்றும் நகர்ப்புறங்களில் ஒரு கிரவுண்ட் நிலத்துக்கு ஆயிரம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4 தாலுகாக்களில்...
விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்களுக்குள் அந்த புலப்படம் தரப்படும். அதுபோல தகுதி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் அது நிராகரிக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பத்திரப்பதிவுக்கு முன்பாக உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறையை பரீட்சார்த்த முறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சோழகிரி ஆகிய தாலுகாக்களிலும், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் தாலுகாக்களிலும் அமல்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது கருத்து ஏற்கப்பட்டு அதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.