பியாங்யாங்,
அமெரிக்கா மற்றும் தனது அண்டை நாடான தென்கொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து, தனது போர் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியது.
ஜப்பான் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குரூஸ் வகை ஏவுகணை, ரெயிலில் இருந்து ஏவக்கூடிய அதிநவீன ஏவுகணை மற்றும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை என அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை சோதித்து அண்டை நாடுகளை அதிரவைத்தது வடகொரியா.
அதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை சோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த ஏவுகணையில் புதிய முக்கிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சோதனையின் குறிப்பிடத்தக்க செயல்திறனை ஏவுகணை காட்டியதாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
இது வடகொரியா ஒரு மாதத்தில் நடத்திய 4-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஒருபுறம் சம்மதம் தெரிவித்துவிட்டு, மற்றொருபுறம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதிக்கும் வடகொரியாவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.