வடகிழக்கு பருவமழை தீவிரம்: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கொடைக்கானலுக்கு மீட்புகுழுவினர் வந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம்: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வருகை
Published on

கொடைக்கானல்,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. சுற்றுலா பயணிகளும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.

இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மலைப்பாதையில் மரங்கள் சரிந்து விழக்கூடும் என்று கருதப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக, சென்னையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 20 வீரர்கள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) முதல் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவின்படி, கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் ஓடியது. மழை காரணமாக கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com