புதுடெல்லி,
டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட முழு பக்க விளம்பரத்தில் கிரிக்பிளே என்ற செயலியை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.
இதை கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஆராய்ந்தது. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும், இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அரசியல் ஆதாயம் தேடித் தரும் நோக்கிலும் உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி கருதினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவுதம் கம்பீருக்கும், அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்துக்கும் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காகத் தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற விவரத்தை மே மாதம் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.