பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரசும் இந்துத்துவாவை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களும் கோவில்களுக்கு செல்வதும், பசுக்களுக்கு உணவு கொடுப்பதும் என பிசியாக உள்ளனர். மறுபுறம் தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதாவும் அதிரடியான மற்றும் அதிர்ச்சியான அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுக்களுக்கு என்று தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.
இதற்கு அடுத்தப்படியாக 15-ம் தேதி மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகிறது.
மத்திய பிரதேசத்தில் காயமடையும் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க பசு எக்ஸ்பிரஸ் சேவையை மாநில அரசு தொடங்குகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. காயம் அடையும், உடல்நலம் சரியில்லாத கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. வாகனத்தில் கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் இருப்பார்கள் எனவும் தகவல்கள் குறிப்பிடுகிறது. இதுபோன்று பசுவின் உரிமையாளர்கள் எளிதாக பசு எக்ஸ்பிரஸ் சேவயை பெறும் வகையில் உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது, 1962 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுக்கலாம். விரைவில் இனி அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.