நர்சு பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

நர்சு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நர்சு பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
Published on

திருச்சி,

திருச்சி முக்கொம்பு அருகே வடக்கு புலிவலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (22). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த நர்சு ரம்யா இதுகுறித்து டாக்டர் சுபாவுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த டாக்டர் சுபா, பவித்ராவுக்கு அட்மிஷன் போட்டுவிட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பவித்ராவுக்கு அதிகாலை 4.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் உறவினர்களிடம் நர்சு ரம்யா கூறினார். உடனே ஜெகதீஸ்வரன் மற்றும் உறவினர்கள் குழந்தையை காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை தூக்கி கொண்டு மீண்டும் அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர். அங்கு இருந்த நர்சு ரம்யாவிடம் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து விட்டது. பிரசவத்தின்போது டாக்டர் ஏன் வரவில்லை? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு குழந்தையின் உடலை நேற்று காலை 8 மணி அளவில் அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் ஜெகதீஸ்வரன் உறவினர்கள் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். நர்சு பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இனிமேல் பிரசவத்தின்போது டாக்டர்கள் பணியில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com