கூடலூர்,
கூடலூர் பகுதியில் ஏராளமான ஆறுகள் உள்ளது. இதனை பயன்படுத்தி ஓவேலியில் ஹெலன், பல்மாடி, ஆத்தூர் உள்பட பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கூடலூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கோடை காலங்களில் தடுப்பணைகளுக்கு நீர் வரத்து குறைந்து விடுவதால் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் கூடலூர்-கோழிக்கோடு செல்லும் சாலையில் பாண்டியாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கூடலூர் பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 தினங்களாக கூடலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் ஆறுகள், தடுப்பணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தடுப்பணைகளில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் சேரும் சகதியும் அடைத்துள்ளது.
குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நகராட்சி ஊழியர்களால் சீரமைக்க முடிய வில்லை. இதனால் கூடலூர் நகர பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்தால் மட்டுமே குழாய்களை சீரமைக்க முடியும். இதுவரை கூடலூரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறும்போது, பாண்டியாறு, ஓவேலி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மழையும் தொடர்ந்து பெய்வதால் தடுப்பணைகளில் இறங்கி குழாய்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடலூர் நகரில் குடிநீர் வினியோகம் செய்ய சில நாட்கள் ஆகலாம். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.