அங்குல் (ஒடிசா)
தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் நிகழ்ச்சி அங்குல் எனுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரியும், தர்மேந்திர பிரதானும் கலந்து கொள்ள வரவிருந்தனர். அவர்களின் வருகைக்காக செய்தியாளர்களும் காத்திருந்தனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு நிகழ்ச்சி தொடர்பான ஊடக அறிக்கையை வழங்கி வந்தனர். அதனைப் படிக்கப் பிரித்த செய்தியாளர்கள் அதில் ரூ 500 பண நோட்டுக்கள் இருப்பதைக் கண்டனர்.
இதையடுத்து கோபமடைந்த செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் பத்திரிகையாளரான ரஞ்சன் பத்ரா என்பவர் அங்குல் காவல் நிலையத்தில் முறையீடு செய்தார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். சில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆணையமும் துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநில அமைச்சரான நிருசுங்கா சாஹூ லஞ்சம் தர முயன்ற நிகழ்வை கண்டித்துள்ளார்.