சென்னை,
தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரெயில் நிலையங்களில் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் தரப்பில் 7-வது நடைமேடையிலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதற்கான நிதியை ஒதுக்கியதையடுத்து, நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதையடுத்து புதிதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்து கொண்டு நகரும் படிக்கட்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது:-
தெற்கு ரெயில்வேக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளேன். தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வரையும், திருவொற்றியூரில் இருந்து சென்டிரல் வரையும் உள்ள மின்சார ரெயில் நிலையங்களில் கழிப்பறை வசதி செய்யவேண்டும் என கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, கே.எஸ்.ரவிச்சந்திரன், தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் மகேஷ், கூடுதல் மேலாளர் மனோஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.