அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு: ஆண்டிப்பட்டியில் நெசவாளர்கள் வேலைநிறுத்தம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆதரவு

அதிகாரிகள் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் ஆண்டிப்பட்டியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கொப்பையன்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஒருநாளைக்கு 3 ஆயிரம் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் நெய்வதாக நெசவாளர்கள் மீது தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமலாக்கப்பிரிவுக்கு சிலர் புகார் செய்தனர். அதன்பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு, நெசவாளர்களுக்கு அபராதம் விதித்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு நெசவாளர்கள் புகார் மனுவும் கொடுத்தனர். ஆனால் இதுவரை அரசு சார்பில் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்தும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெசவுத்தொழில் குறித்து பொய்யான புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த பிரச்சினை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே நெசவாளர்களுக்கு ஆதரவாக நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் ஒன்றிய பொருளாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் பிச்சைமணி, கைத்தறி சம்மேளனமாநில துணை செயலாளர் செங்கொடிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நெசவாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நெசவு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com