பாக்தாத்,
ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரேஷன் நகம்கழுகு என்ற பெயரில் ஈராக் எல்லையில் உள்ள குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி விமானப்படை விமானங்கள் வான் தாக்குதல் நடத்தின. இதில் குர்து இன போராளிகளின் 81 நிலைகள் நிர்மூலமாக்க பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஆபரேஷன் நகம்புலி என்ற பெயரில் குர்து இன போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை துருக்கி ராணுவம் தொடங்கியுள்ளது. அதன்படி ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து தரை வழியாகவும் வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.