காரைக்கால்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட தேர்தல்துறை கரகாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வருகிற 18-ந் தேதி மறவாமல் வாக்களிப்பேன். எனது வாக்கு விற்பனைக்கு அல்ல. நேர்மையான முறையில் வாக்களிப்பேன் என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கரை, ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காரைக்கால் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் தலைமை தாங்கி, வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார். தொடர்ந்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி கல்விமாறன், சுவீப் அதிகாரி லக்ஷ்மணபதி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர்.