புதுடெல்லி,
இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக நகர்த்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், பல தசாப்தங்களாக எல்லை பிரச்சினையும் நிலவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளதுதான்.
இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேறியது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இந்த சேர்க்கை விரிவாக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் கூறுகிறது. இந்த பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் வலுவான பொருளாதார ஆதரவு, உள்நாட்டு அரசியல் சலசலப்புகள், நேபாள இளம் தலைமுறையின் விருப்பங்கள் மற்றும் இந்தியாவின் மெத்தனப்போக்கு ஆகியவையே நேபாளத்தின் நடவடிக்கைக்கு காரணம் என மூத்த அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2008 முதல் 2011 வரை நேபாளத்துக்கான இந்திய தூதராக பணியாற்றிய ராக்கேஷ் சூட் இதுபற்றி கூறுகையில் இரு நாடுகளும் தங்களின் நட்புரவை மிகவும் ஆபத்தான நிலைக்கு அனுமதித்துள்ளன. இந்தியா நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பத்திலேயே முன் வந்திருக்க வேண்டும். தற்போது நேபாளர்கள் ஆழமாக இறங்கிவிட்டார்கள். இதில் இருந்து வெளிவருவது கடினம் என கூறினார்.
அரசியல் சலசலப்பு
2013 முதல் 2017-ம் ஆண்டு வரை நேபாளத்திற்கான இந்திய தூதராக பணியாற்றிய தூதர் ரஞ்சித் ரே, நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது நிலையை பலப்படுத்துவதற்கும் உள்நாட்டு அரசியல் சலசலப்புகளை வெல்வதற்கும் புதிய வரைபடத்துடன் முன்னேற முடிவு செய்துள்ளார் என்றார்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான உணர்வை வளர்ப்பது தேர்தலில் வெற்றிபெற கேபி ஷர்மா ஒலிக்கு உதவியது. தற்போது கொரோனா விவகாரத்தில் அவரது அரசின் மீது எழுந்துள்ள அழுத்தங்களை சமாளிக்க இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை உதவும் என அவர் நினைக்கிறார் என்று ரஞ்சித் ரே கூறினார்.
தங்களுக்கு சீனாவின் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக அரசியல் வல்லுனரும், பேராசிரியருமான எம்.டி. முனி கூறுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில் நேபாளம் கிளப்பியுள்ள இந்தப் பிரச்சினையில் சீனா ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மற்றுமொரு முக்கிய காரணம் நேபாளம் புதிய உறவுகளை நோக்கி செல்கிறது. அவர்கள் பழைய கட்டமைப்பை பற்றி கவலைப்படவில்லை. இதற்கு காரணம் சீனாவில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்களாக உள்ளனர் அவர்களின் விருப்பம் புதியதாக உள்ளது அதனை இந்தியாவால் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.
இதனிடையே நேபாளம் அனைத்து வகையான அத்தியாவசிய தேவைகளுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியாவுடனான உறவை மோசமடைய விடக்கூடாது என நேபாளத்தின் மூத்த பொருளாதார நிபுணர் போஸ் ராஜ் பாண்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் நேபாளஇந்தியா உறவுகளை சேதப்படுத்த அனுமதிக்கக்கூடாது. பிரச்சினையை விரைவாக தீர்க்க ஒரு உரையாடல் தேவை அத்தியாவசிய பொருட்களுக்காக நேபாளம் இந்தியாவை சார்ந்துள்ளது. நேபாள அரசின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், அது நாட்டில் பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்.