காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தென் தமிழக கல்லூரிகளுக்கு இடையேயான கலை, இலக்கிய போட்டிகளும், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கலை, இலக்கிய போட்டிகளும், கடந்த ஒருவாரமாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா காமராஜர் பிறந்த நாளான நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர் செந்தூர்பாண்டி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், இளைஞர்கள் புதுமையை நோக்கி சிந்திக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வல்லரசு இந்தியா 2020 என்ற புத்தகத்தில் கூறியுள்ளவாறு இளைஞர் சிந்தனை குறித்த உறுதிமொழியை அனைத்து மாணவ மாணவிகளும் எடுத்துக் கொண்டனர். முடிவில் பேராசிரியை சிவபாக்கியம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி பழைய மாணவர் சங்க பொது செயலாளர் வி.டி.விமல்ராஜ், முன்னாள் தலைவர் மனோகரன், பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் செந்தூர்பாண்டி தலைமையில் பேராசிரியர்கள் சிவபாக்கியம், முரளி, சுபாஷினி, மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com