கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். தீ வைக்கப்பட்ட அவரது காதலன் உயிர் ஊசலாடுகிறது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.
Published on

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம், அன்பானந்தம் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 38). இவரது மனைவி லட்சுமி (34). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்வேல் முருகன் கூலி தொழில் செய்து வந்தார்.

லட்சுமி அதே பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்யும் கோவிந்தசாமி (62) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை செந்தில்வேல்முருகன் கண்டித்தார். இதனால் மோதல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அதே பகுதியில் உள்ள தியாகி குப்பன் தெருவில் இருக்கும் கோவிந்தசாமியின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று அதிகாலை செந்தில்வேல் முருகன், கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். கோவிந்தசாமி கதவை திறந்தார். உடனே தனது கையில் எடுத்துச் சென்றிருந்த கேனில் வைத்திருந்த பெட்ரோலை கோவிந்தசாமி மீது செந்தில்வேல் முருகன் ஊற்றியதாக தெரிகிறது. பின்னர் அவரது உடலில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடலில் பற்றி எரிந்த தீயுடன் கோவிந்தசாமி அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி எழுந்து ஓடி வந்தார். அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி செந்தில்வேல்முருகன் தீ வைத்தாராம். லட்சுமியும் தீயில் எரிந்தபடி வெளியில் ஓடி வந்தார். வந்த காரியத்தை முடித்து விட்டு செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 2 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை லட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தியாகராயநகர் துணை கமிஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில், எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிய நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கோவிந்தசாமியிடம், போலீசார் மாஜிஸ்திரேட்டு மூலம் மரணவாக்கு மூலம் பெற்றதாக தெரிகிறது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட செந்தில்வேல்முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com