மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று காலை ஆரல்வாய்மொழி பகுதியில் சூறைக்காற்று வீசியது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

ரெயில் காலை 6.30 மணி அளவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுபாஷ்நகர் வந்தது. அப்போது ரெயில் மீது ஏதோ விழுந்தது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் கீழே இறங்கி பார்த்தபோது சூறைக்காற்று காரணமாக ரெயில் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதன் காரணமாக ரெயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் ரெயில் நடுவழியில் நின்றது. மின்கம்பி அறுந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக மின் இணைப்புகள் தானாகவே துண்டிக்கப்பட்டுவிட்டன. இல்லையெனில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி வழியாக மின்சாரம் ரெயில் பெட்டிகளில் பாய்ந்து பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இதைத் தொடர்ந்து சம்பவம் பற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அப்பகுதியில் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயர் அழுத்த மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்வே சேவை தொடங்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ரெயில் மீது உயர் அழுத்த மின்கம்பி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய மற்றும் அங்கிருந்து செல்ல வேண்டிய ரெயில்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com