திருச்சி-திண்டுக்கல் சாலையில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை

விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையால், திருச்சி- திண்டுக்கல் சாலையில் ஊருக்குள் திரும்பும் இடங்களின் அருகே சாலை தடுப்புகளில் தள ஓடுகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
Published on

திருச்சி,

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, அம்மாபேட்டை உள்பட முக்கிய ஊர்களுக்கு செல்வதற்காக சாலையின் நடுவில் இடைவெளி விடப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் இந்த இடைவெளிகளில் (யூ டர்ன்) திரும்பி செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், மற்றும் பாதசாரிகளும் சாலையை குறுக்காக கடந்து செல்வதும் உண்டு. இப்படி செல்லும்போது வேகமாக வரும் வாகனங்களால் உயிர்ப்பலி வாங்கும் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் வளர்க்கப்பட்டு இருக்கும் பூச்செடிகள் மற்றும் மரங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக இடைவெளி உள்ள பகுதியில் இருந்து சாலையின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு வளர்க்கப்பட்ட மரங்களை வெட்டி எடுத்து அதற்கு பதிலாக அந்த இடத்தை மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மேம்படுத்தி தள ஓடுகள் (ஹாலோ பிரிக்ஸ்) பதிக்கப்பட்டு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான நட வடிக்கைகளை எடுத்து உள்ளது.

இதன் மூலம் வாகனம் ஓட்டும் டிரைவர்கள் நீண்ட தூரத்தில் வரும்போதே தாங்கள் திரும்ப வேண்டிய இடத்தில் இடைவெளி இருப்பதை எளிதாக தெரிந்து கொண்டு வாகனத்தின் வேகத்தை குறைத்துக்கொள்ள வசதி ஏற்படுகிறது. திருச்சி-மணப்பாறை இடையே மட்டுமின்றி திண்டுக்கல் வரை முக்கிய இடங்களிலும் இதுபோன்று தள ஓடுகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையிலும் பல முக்கிய இடங்களில் இதுபோன்ற பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com