கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழை மூலமும், சில மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழை மூலமும் பயன் அடைகிறது. தற்போது கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனை முன்கூட்டியே கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்கள், கண்மாய்களிலும் குடிமராமத்து பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 422 ஊருணிகள் தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவிலும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 88 கண்மாய்கள் தலா ரூ.5 லட்சம் செலவிலும் தூர்வாரப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே, கோவில்பட்டி நகரில் ரூ.7 கோடி செலவில் நாற்கரசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எந்த அளவுக்கு சாலை அமைக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு சாலை அமைக்கப்படும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றியும் இல்லை, அ.தி.மு.க.வுக்கு தோல்வியும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்பது ஒரு பொருட்டே கிடையாது. அ.தி.மு.க. வெற்றி இலக்கை அடைந்து விட்டது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் சாயம் வேலூரில் வெளுத்து விட்டது. இங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைதான் அ.தி.மு.க.வுக்கு. இதனை நாங்கள் தோல்வியாக எடுத்து கொள்ளவில்லை. அதிகமான மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர்.
முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றுக்கும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் முத்தலாக் தடை சட்டத்தை வட மாநிலங்களில் பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் வரவேற்று உள்ளனர். அதேபோன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே தெரிவித்து உள்ளார். அதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
முதலில் ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது, அது திணிக்கப்படுவது போன்றே தெரியும். பின்னர் அதன் நன்மைகளை கருதி, மக்கள் ஏற்று கொள்வார்கள். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முதலில் அமல்படுத்தியபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அதனை அனைவரும் ஏற்று கொண்டனர். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய்ந்து, தமிழக அரசு உரிய முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.