வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை - அதிகாரிகள் தகவல்

விலை உயர்வு காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல், ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published on

வேலூர்,

கடந்தசில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே சென்றது. அதிகப்பட்சமாக கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனையானது. இதனால் ஓட்டல்களில் வெங்காயம் பயன்படுத்த முடியாத காரணத்தால் ஆம்லெட் போடுவது நிறுத்தப்பட்டது.

பொதுமக்களும் வெங்காயம் இன்றி சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். விலை உயர்வு காரணமாக அவர்கள் வெங்காயம் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டார்கள். வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டதால் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

மேலும் வெங்காயத்தை பதுக்கி வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை செய்தது. அதிகாரிகளும் கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தினர். இதனால் தற்போது வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

இந்தநிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரேஷன்கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. 3 மாவட்டங்களிலும் 1,842 ரேஷன் கடைகள் உள்ளன. வேலூர் மாநகராட்சியில் மட்டும் 137 கடைகள் உள்ளன.

இந்த கடைகள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல், வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 31 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.40-க்கு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக இன்று வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 137 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com