‘நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறுவது சந்தர்ப்பவாதம்’ தேர்தல் பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்வதாக காங்கிரஸ் வேட்பாளர் கூறுவது சந்தர்ப்பவாதம் என்று தேர்தல் பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
‘நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறுவது சந்தர்ப்பவாதம்’ தேர்தல் பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Published on

குழித்துறை,


கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். கோட்டகத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவருக்கு தாமரை பூ கொடுத்து மக்கள் வரவேற்றனர். பின்னர் அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து பா.ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் முன் செல்ல மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்த ஜீப்பில் சென்றவாறு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் சாங்கை, காஞ்சிரகோடு, மார்த்தாண்டம், விரிகோடு வழியாக நட்டாலம், கொல்லஞ்சி, விளவங்கோடு, நல்லூர், உண்ணாமலைக்கடை, பாகோடு, குழித்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார்.


முன்னதாக அவர் பிரசாரத்தை தொடங்கிய போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். இந்த செயல் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக உள்ளது. இவ்வாறு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்திலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி நடக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்வதாக காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறுவது சந்தர்ப்பவாத பேச்சாகும். 18ந் தேதி தேர்தலுக்கு பிறகு நீட்டாக பேசுவார்கள். ராகுல்காந்தி வட இந்தியாவில் தோல்வியை சந்திப்பார். இதன் காரணமாக தான் கேரளா மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். ஆனால் இங்கும் அவருக்கு தோல்வி தான் ஏற்படும். முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com