உருக்காலையை தனியார் மயமாக்க எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்

உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இதை தொடங்கி வைத்தார்.
Published on

சேலம்,

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும், அவற்றை பொதுத்துறையில் காத்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தர்ணா போராட்டத்தை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் உருக்காலை உள்பட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் அவசரம், அவசரமாக நாள் ஒன்றுக்கு 3 மசோதாக்களை நிறைவேற்றி வருகிறார்கள். முத்தலாக் சட்டம் நிறைவேற்றம் உள்பட பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆனால் அவர் தங்களது ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார். ஆட்சியை தக்க வைப்பதற்காக தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முதல்-அமைச்சர் தயாராக உள்ளார். முத்தலாக் சட்ட மசோதா விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பொதுமக்களே விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது, உருக்காலையில் தொழிற்பேட்டை அமைத்திடு என்பன வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி இருந்தனர். போராட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com