

மைசூரு,
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மங்களூருவில் கடந்த மாதம் 19-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக மைசூரு அரண்மனை வளாகத்தில் அமைந்து உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மைசூரு மாவட்ட மகளிர் காங்கிரசார் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவி புஷ்பா அமர்நாத் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோலம் போட்டனர்.
அப்போது வேண்டாம் குடியுரிமை திருத்த சட்டம், வேண்டாம் தேசிய குடிமக்கள் பதிவேடு என்று கோலத்தால் எழுதி இருந்தனர். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர். இதன் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பாணியில் கர்நாடகத்திலும் கோலம் போடும் போராட்டம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.