

புனே,
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 613 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு 19,268 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த நகரங்களில் இருந்து விமானங்கள் வருவதற்கு கொல்கத்தா விமான நிலையம் நேற்று தற்காலிக தடை விதித்தது.
மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 4 போலீசார் உயிரிழந்து உள்ளனர். 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான போலீசாரின் எண்ணிக்கை 5,205 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,071 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். 1,070 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.