பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை இன்று திறப்பு அதிகாரி தகவல்

பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இளங்கோ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன் ஆகியோர் வந்தனர். ஆனால் கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள் வரவில்லை.

இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் தங்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகக்கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், கலெக்டர், வருவாய்த்துறை தொடர்பான வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்றுள்ளார். எனவே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்துமாறு எங்களை அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கலெக்டர் இந்த கூட்டத்துக்கு வந்து பேச்சிப்பாறை அணை திறப்பது தொடர்பாக நல்ல தகவலை சொல்ல வேண்டும். அதுவரை நாங்கள் இந்த கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். அதிகாரிகளையும் இங்கிருந்து வெளியேற விடமாட்டோம் எனக்கூறி கோஷம் எழுப்பினர்.

மேலும் அவர்கள் தொடர்ந்து பேசும்போது கடந்த மாதம் நடந்த கூட்டத்தின்போது இன்னும் 10 நாட்களுக்குள் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்குமுன் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 7 அடியாக இருந்தபோதுகூட அணையை திறக்க அப்போதைய கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இப்போது அணை நீர்மட்டம் 18 அடியாக இருப்பதால் உடனடியாக அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் அணையை திறக்க அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ 11.55 மணிக்கு கூட்ட அரங்குக்கு வந்தார். அவர் அணை திறப்பது பற்றி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

அவரது சமாதானத்தையும் ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மதியம் 12.20 மணிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூட்ட அரங்குக்கு வந்து கூட்டத்தில் பங்கேற்றார். அவரது முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ பேசும்போது, விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணை நாளை (அதாவது இன்று) திறக்கப்படும் என அறிவித்தார். அதை வரவேற்ற விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், மணிகண்டேஸ்வர குமாரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com