பாகூர்,
புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூரில் கோடைகால நெல்பருவமான நவரை பருவ சாகுபடி நடந்துவருகிறது. நவரை பருவ அறுவடை தற்போது கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம், மடுகரை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. கோடை வெயில் அதிகரித்த நிலையில் ஏரிகளில் தேக்கிய நீரினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. நிலத்தடி நீர் மட்டத்தை கொண்டு மோட்டார் பம்பு செட் மூலம் நவரை பருவ நெல் பயிரிடப்பட்டது. இந்த நவரை பருவத்தில் கொடை வெயிலை தாங்கும் நெல் ரகங்களான சின்னபொன்னி, ஐ.ஆர்.50, ஏ.டி.டீ.ரகங்களான 47, 49, 90, 91 போன்ற வகைகள் பயிரிடப்பட்டன.
நெற்பயிர் நன்கு விளைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அறுவடை தொடங்கியது. எந்திரத்தின் மூலம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாகுபடியில் ஏக்கருக்கு 25 முதல் 40 மூட்டை நெல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். ஒரு மூட்டை நெல் ரூ. 1100 முதல் 1400 வரை விற்கப்படுகிறது.
மேலும் வைக்கோல்களை மாடுகளுக்கு தீவனமாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். எந்திரத்தின் மூலம் அறுவடை நடைபெறும்போது நெல்லை மட்டும் சேகரித்துக்கொண்டு வைக்கோல்களை நிலத்திலேயே கொட்டப்படுகிறது.
மாடுகளுக்கு தீவனமாக இந்த வைக்கோலை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அவ்வாறு வாங்கும்போது வைக்கோல்களை உருளை வடிவில் கட்டி அவற்றை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். 20 முதல் 30 கிலோ எடைகொண்ட இந்த உருளை கால்நடை வளர்ப்போர் மற்றும் பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு உருளை வைக்கோல் ரூ.100 முதல் அதன் தரத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொன்னி நெல் வைக்கோல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற வைக்கோல் ரகங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது.