தூதரக உறவு துண்டிப்பு விவகாரம்: ‘பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ மத்திய அரசு வலியுறுத்தல்

இந்தியாவுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதை பாகிஸ்தான் அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
தூதரக உறவு துண்டிப்பு விவகாரம்: ‘பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ மத்திய அரசு வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதை கண்டிக்கும் வகையில் இந்தியாவுடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் இருநாட்டு தூதரக உறவுகளை தரமிறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தானில் உள்ள தூதரை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்திய பாகிஸ்தான், இந்தியாவுக்கான தங்கள் நாட்டு தூதராக நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரியும் டெல்லிக்கு வரமாட்டார் என தெரிவித்தது.

இந்தியா கவலை

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா கவலை தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசியல்சாசனம் எப்போதும் நாட்டின் இறையாண்மை விவகாரமாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது, இனியும் இருக்கும். இந்த அதிகார எல்லைக்குள் எச்சரிக்கும் நோக்குடன் தலையிடுவது ஒருபோதும் வெற்றி பெறாது. அரசியல் சட்டப்பிரிவு 370 (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும்.

அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருந்த தற்காலிக வழிமுறைகள் காஷ்மீருக்கு மறுத்த வளர்ச்சியை கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாடாளுமன்றம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பாலினம் மற்றும் சமூக பொருளாதார பாகுபாடுகள் நீங்கும்.

ஒரு தலைப்பட்ச நடவடிக்கை

ஆனால் இந்த நடவடிக்கைகளை முன்வைத்து, இந்தியாவுடனான இருதரப்பு உறவு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கும் தகவல்களை நாங்கள் அறிந்தோம். இதில் நமது தூதரக உறவுகளை தரமிறக்குவதும் அடங்கும்.

நமது இரு தரப்பு உறவுகள் தொடர்பாக உலகுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு பாகிஸ்தான் கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் கள நிலவரத்துக்கு எதிரானது.

ஆச்சரியம் இல்லை

காஷ்மீரின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உணர்வுகளை பயன்படுத்தி வருகிறது.

இருநாட்டு உறவுகள் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலையை தருகிறது. எனவே இந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com