ஏரி, குளங்கள் வறண்டு மைதானமானது: பல்லாவரம் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கல்குவாரி தண்ணீரை வழங்க ஏற்பாடு

பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டு மைதானமாக காட்சி அளிக்கிறது. கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி தண்ணீரை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Published on

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் நகராட்சியில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 452 ஆகும். இவர்களுக்கு சராசரியாக 290 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படவேண்டும். ஆனால் மிக குறைந்த அளவு தண்ணீரையே குடிநீர் வடிகால் வாரியமும், சென்னை குடிநீர் வாரியமும் வழங்கி வருகிறது.

தினமும் 54 லட்சம் லிட்டர் தண்ணீர் தரவேண்டிய குடிநீர் வடிகால் வாரியம் 20 லட்சம் லிட்டரும், 25 லட்சம் லிட்டர் வழங்கவேண்டிய சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் வாரம் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் கூட வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பல்லாவரம் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பல்லாவரம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காலி மைதானமாக காட்சி அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் பல நூறு அடிகளுக்கு கீழே சென்றுவிட்டதால் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் நகராட்சி பகுதி முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டதால் அவற்றை தூர் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மூவரசம்பட்டு பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை மக்கள் பிடித்து வைத்து குளிப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளநிலையில் கல்குவாரிகளை தேடி தேடி கண்டுபிடித்து அவற்றை சுத்தப்படுத்தி அந்த தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்க பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதன்படி திரிசூலம் பகுதியில் ஆண்டாண்டுகாலமாய் தேங்கி கிடந்த கல்குவாரி தண்ணீரை சுத்தம் செய்து, பல்லாவரம் நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் வினியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் முன்னுரிமை அளிக்கும் சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம், பல்லாவரம் நகராட்சி பகுதியை புறக்கணித்து வருகிறது. கூடுதல் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தாமல் குடிநீர் வடிகால் வாரியமும் கைவிரித்துவிட்டது. இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கேன் தண்ணீரை மட்டுமே மக்கள் நம்பி இருக்கும் நிலை உள்ளது.

புறநகர் பகுதி மக்களையும் கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். குடிநீர் வடிகால் வாரியமும் பல்லாவரம் நகராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீரை முறையாக வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி பொறியாளர் கருப்பையா ராஜா கூறியதாவது:-

பல்லாவரம் நகராட்சி பகுதியில் நிலத்தடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக திரு.வி.க.நகர், நன்மங்கலம், மூவரசம்பட்டு, கீழ்கட்டளை, சரஸ்வதி காலனி பகுதிகளில் இருந்து கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

மூவரசம்பட்டு கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் நிலத்தடிநீர் தட்டுப்பாட்டை போக்க திரிசூலம் பகுதியில் உள்ள கல்குவாரியை சுத்தம் செய்து அங்கிருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இந்த தண்ணீரை குடிக்க பயன்படுத்தவில்லை என்றாலும் பொதுமக்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய இவை பயன்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com