நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Published on

நெல்லை,

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நேற்று நெல்லை ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசிலர் தரையில் உருண்டும் போராட்டம் நடத்தினர். பின்னர் பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாளையங்கோட்டை யூனியனில் ராமையன்பட்டி பஞ்சாயத்து முதல்நிலை பெற்றது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சிவாஜிநகர், அரசு புது காலனி, சைமன் நகர், சகி நகர், சுபராசி நகர், பாலாஜி நகர், காவேரி கார்டன், யு.ஜி.எஸ். நகர் போன்ற பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் குழாய் போன்ற அடிப்படை வசகிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலைகள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. மேலும் சேறும், சகதியும் நிறைந்து காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதவிர சத்திரம் புதுக்குளம் கரையோரத்தில் வேப்பங்குளம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் சகதியாக உள்ளது. விவசாயிகள் கரையில் செல்ல முடியவில்லை. இதனை தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும்.

எனவே உடனடியாக பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளை முழுமையாக மேம்படுத்தி கொடுக்க வேண்டும். தெருவிளக்குகளை புதுப்பிப்பதுடன், அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தீவிர போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com