

திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள தில்லை நகர் ஈ.வெ.ரா.தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 43). இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா. நேற்று முன்தினம் மனைவி விமலாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
அதனால் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் விமலாவுக்கு சிகிச்சை அளிக்க வேலாயுதம் முடிவு செய்தார். அதன்படி வீட்டை பூட்டிவிட்டு, விமலாவை அழைத்து கொண்டு வேலாயுதம் திருச்சிக்கு புறப்பட்டார்.
சிகிச்சையை முடித்துவிட்டு, நேற்று அதிகாலை வேலாயுதம் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த வேலாயுதம் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 40 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வேலாயுதம் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். மேலும் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.