பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் நள்ளிரவில் வேறு சிறைகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Published on

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் நள்ளிரவில் வேறு சிறைகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு, மாடுலர் கிச்சன் அமைத்து சமைத்து பரிமாறியது தொடங்கி விதிமுறைகளுக்கு மாறாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வசதிகள் செய்து தந்ததற்காக ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி அறிக்கை அளித்தார். அது தீக்குச்சியை பற்ற வைத்து போட்டாற்போல இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் அவருக்கும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது இரண்டாவது அறிக்கையை கர்நாடக அரசு உள்துறை செயலாளர், கூடுதல் தலைமைச்செயலாளர்கள், ஊழல் தடுப்பு போலீஸ் துறை தலைவர், போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி. மற்றும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ஆகியோரிடம் அளித்தார்.

இதை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் ரூபா உறுதி செய்தார். அதே நேரத்தில் அந்த அறிக்கையின் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

இருப்பினும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளன. அவை வருமாறு:-

* சிறையில் நிலவுகிற முக்கிய பிரச்சினைகள் குறிப்பாக அதிகாரிகளிடம் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவது பற்றி கைதிகளோடு தான் கலந்துரையாடியது பற்றிய படக் காட்சிகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு உள்ளன.

* சசிகலாவுக்கு என்று பிரத்யேகமாக ஒரு சந்திப்பு அறை அளிக்கப்பட்டுள்ளது.

* சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறை அருகே அமைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வேண்டுமென்றே வேலை செய்ய விடாமல் முடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை ரூபா அளித்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 32 தண்டனை கைதிகள் அவசர அவசரமாக பல்லாரி, பெலகாவி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சிறைகளுக்கு அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டனர்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னணி பற்றி பரப்பன அக்ரஹாரா சிறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

32 கைதிகள் பல்லாரி, பெலகாவி சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த கைதிகள் அனைவரும் தங்களுக்கு ஏற்படுகிற குறைகள் குறித்து வெளியே சொல்லவும், சிறையின் தலைமை சூப்பிரண்டு கிருஷ்ண குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வெளியிடவும் முயற்சித்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு டி.ஐ.ஜி. ரூபாவால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையால் அவரை சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

சிறை சூப்பிரண்டு நடந்து கொள்ளும் விதம், அந்த கைதிகளுக்கு வேதனையை அளித்தது. கடந்த காலத்தில் அவர்கள் தங்கள் குறைகளை வெளியே சொன்னபோது, சிறை சூப்பிரண்டால் அடி, உதைக்கும் ஆளானவர்கள் ஆவார்கள். சசிகலா விவகாரம் தொடர்பாக அரசு விசாரணை நடைபெறுகிற போது, சிறை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை அவர்கள் தெரிவிப்பார்கள் என்ற பயத்தில்தான் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com