லக்னோ,
அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக விளங்கிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லாவுக்கு (குழந்தை ராமர்) வழங்க உத்தரவிட்டும், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
அதே நேரத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு பொதுவாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், அதன் அவசர செயற்குழுவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கூட்டி முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்வதா, புதிய மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்வதா என்பதில் முடிவு எடுக்கப்படும்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் மவுலானா காலித் ரசீத் பரங்கி மஹாலி, லக்னோவில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், அவசர செயற்குழு கூட்டத்தில் 51 செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி விவாதிப்போம் என கூறினார்.
இந்த கூட்டத்துக்கு தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ஹசன் நத்வி தலைமை தாங்குகிறார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை, இதில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்வது பற்றி ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) முடிவு செய்வோம் என அனைத்து இந்திய பாபர் மசூதி நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ஜப்பார்யப் ஜிலானி கூறி உள்ளார்.
அயோத்தி வழக்கில் ஒரு தரப்பினரான ஜாமியத் உலாமா இ இந்த் அமைப்பு, அரசு கையகப்படுத்தி வைத்துள்ள 67 ஏக்கர் நிலப்பரப்புக்கு வெளியே 5 ஏக்கர் நிலம் தந்தால் ஏற்க மாட்டோம் என கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.
மற்றொரு தரப்பான உத்தரபிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்து விட்டது.
அதே நேரத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து முடிவு எடுக்க 26-ந் தேதி இந்த வாரியம் கூடுகிறது.