பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நேற்று 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.
வருகிற 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பா.ஜனதா அல்லாத ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் எத்தகைய முடிவு வரும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பற்றிய விவரங்களை ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
இதில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் காங்கிரசுக்கு லாபத்தை விட நஷ்டம் தான் அதிகம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
அதற்கு ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் வரை கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்றும், இதுபற்றி ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்களுடன் பேசுவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு, ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
மத்தியில் பா.ஜனதா அல்லாத அரசு அமையவுள்ளது. கட்சியில் ஒழுங்கை காப்பாற்றுவது முக்கியம். இதுபற்றியும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினோம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும்.
கட்சி கட்டுப்பாடுகளை மீறி பேசுவதை தவிர்க்க வேண்டும். காங்கிரசுடன் நாங்கள் இருக்கிறோம் என்று தேவேகவுடா கூறியிருக்கிறார். அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சந்தேக பார்வையுடன் பார்ப்பது தவறாகிவிடும்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொண்டுள்ளோம். இனி கூட்டணிக்கு எதிரான கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாது. ஒருங்கிணைப்பு குழுவில் ஜனதா தளம் (எஸ்) தலைவர் எச்.விஸ்வநாத்தை சேர்த்துக்கொள்வது பற்றி விவாதிக்கவில்லை. இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.