நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Published on

திருச்செந்தூர்,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை முன்னிட்டும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றதையொட்டியும் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் தி.மு.க.வினர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் வ.உ.சி. திடல் அருகே தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்முருகேசன், முன்னாள் நகர பஞ்சாயத்து உறுப்பினர் கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கோவில்பட்டியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கயத்தாறிலும் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com