திண்டுக்கல்,
திண்டுக்கல் உழவர் சந்தை அருகே, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜனநாயக முறையில் யார் வேண்டுமானாலும் எந்த கட்சி வேண்டுமானாலும், ஆட்சிக்கு வரலாம். குரங்கு கையில் அகப்பட்ட ரோஜா மாலை என்ன கதிக்கு ஆளாகும் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படித்தான் நாடு இன்று பா.ஜ.க.விடம் அகப்பட்டுக்கொண்டது. எனவே நாட்டை அவர்களிடம் இருந்து மீட்பதற்காகவே இந்த நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என்று கூறினார். நல்லவேளை சென்னை ஐகோர்ட்டு விவசாயிகளை காப்பாற்றியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியது போல் மோடிக்கும், பாடிக்கும் தலையில் அடித்தது போல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வந்த பிறகு மானம் உள்ளவராக இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறவில்லை. அவர் பகிரங்கமாக இந்த தீர்ப்பு குறித்த அரசின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்தவர் அந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாமா? ஓட்டு கேட்கலாமா?.ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக துண்டுபிரசுரம் வெளியிட்டதற்காக முகிலன் என்ற சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றால் முகிலன் எங்கே?.
உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி, மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்து அதன் நெஞ்சு பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்று மோடியின் சீடர்கள் சுடுகிறார்கள். பின்னர் அந்த பொம்மையை தீயிட்டு எரிக்கிறார்கள். ஆனால் டெல்லியில் பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் சமாதிக்கு அருகில் நின்று அஞ்சலி செலுத்துகிறார்.
திரைப்படத்துறைக்கு சென்றிருந்தால் நடிகர் சிவாஜி கணேசனை காட்டிலும் சிறந்த நடிகராக மோடி திகழ்ந்திருப்பார். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் உள்ளிட்ட பலருக்கு வாக்குப்பதிவு மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.