தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக பெரம்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் மீது பொய் புகார் கூறிய பெண் கைது

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் மீது பொய் புகார் கூறியதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக பெரம்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் மீது பொய் புகார் கூறிய பெண் கைது
Published on

பெரம்பூர்,

நாடாளுமன்ற தேர்தலோடு சென்னை பெரம்பூர் தொகுதிக்கும் வருகிற 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தனரஞ்சனி (வயது 30) என்பவர் வேட்பாளர் ராஜேஷ் மீது நேற்று பரபரப்பு புகார் கூறினார். அதில், எனது கணவர் நரேந்திரன் வக்கீலாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நானும், எனது கணவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். எங்களை அழைத்து சமாதானம் பேசிய வேட்பாளர் ராஜேஷ், என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

வேட்பாளர் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கொடுங்கையூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரை சேர்ந்த நளினி என்ற அ.தி.மு.க. நிர்வாகியின் கையை 2 பேர் பிளேடால் அறுத்துவிட்டு ஓடினர்.

உடனே அங்கிருந்த கட்சியினர் 2 பேரையும் மடக்கிப்பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சரவணன் (21) மற்றும் யூசுப் (20) என்பது தெரியவந்தது. இருவரும் அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், தனரஞ்சனியை அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் தாக்கவில்லை என்பதும், வேட்பாளர் மீது அவர் பொய் புகார் கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தனரஞ்சனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com