பெருந்துறை,
பெருந்துறையில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஆஸ்பத்திரி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாக மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கு 70-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்த ஆஸ்பத்திரியில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் 17-ந் தேதியில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஆஸ்பத்திரியில் தூய்மை பணி மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தாங்கள் பணிபுரிந்த 2 மாதத்துக்கான சம்பளத்தை, ஒப்பந்த நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கூறி கடந்த 2 நாட்களாக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து 3-வது நாளாகவும் ஆஸ்பத்திரியில் தொழிலாளர்கள் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் தரப்பு மற்றும் ஒப்பந்த நிறுவன மேலாளர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை 4 மணி வரை நீடித்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில், இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.423 வழங்குவது எனவும், நிலுவையில் உள்ள சம்பளம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) மாலை 5 மணிக்குள் அந்தந்த ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் பணியில் சேரும்போது அறிவிக்கப்பட்ட தினசரி சம்பளமான ரூ.490-க்கு பதிலாக ரூ.423 வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ரூ.67-ஐ உடனே வழங்க வேண்டும் எனக்கேட்டு நாளை மறுநாள் (அதாவது நாளை திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடப்போவதாக, தெரிவித்தனர்.